Sunday 20 September 2015

தங்க மீன்கள்... படத்தின் கரு சரியா.....???


சில நாட்களாகவே கடும் பிரச்சினைகளுக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாகி இருந்த சூழ்நிலையில், நேற்றைக்கு முதல் நாள் தொலைக்காட்சியில் தங்க மீன்கள் படத்தை நிதானமாக பார்க்கும் வாய்ப்பு கிட்டியது!

கவர்ச்சி சமாச்சாரங்கள் இல்லாத திரைக்கதை, சராசரியான படங்களில் வருவதைப் போல கதாநாயகன், கதாநாயகி, வில்லன் போன்ற சாமாச்சாரங்கள் கிடையாது. முக்கியமாக வன்முறை கிடையாது. விரசமான நகைச்சுவைகள் கிடையாது. மெல்லிய இழையோடும் திரைக்கதை என பல பாராட்டும்படியான் அம்சங்கள். மெல்லிய திரைக்கதை இழையாடும் திரைப்படங்களில் கூட டூயட் உண்டு. ஆனால் இந்த படத்தில் அதுவும் இல்லை! இயக்குனர் ராம், ஷெல்லி நாபு குமார், பத்மபிரியா, குழந்தை சாதனா என அனைவரின் நடிப்புமே பிரமாதம். இயக்குனர் மற்றும் அனைத்து தொழில்நுட்ப வல்லுனர்களுமே (ஒளிப்பதிவு உட்பட) பாராட்டுகுறியவர்களே. திரைக்கதையும் காட்சிப்படுத்துதலும் மிகவும் சிறப்பு.

 ஆனால் படத்தின் கதை மிகவும் சர்ச்சைக்குறியது. தந்தை என்பவரே ஒரு குடும்பத்தில் பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தை கற்றுத்தர வேண்டியவர். அதற்கு ஒரு தந்தை செய்யும் தியாகம் அளப்பறியாதது. அதுதான் பாசத்தையே தியாகம் செய்வது! பிள்ளைகள் மீது அளவு கடந்த பாசம் இருந்தாலும் கண்டிப்பை காட்ட வேண்டிய தருனங்களில் பாசத்தை முழுமையாக மறைத்து கடுமை காட்டுவது ஒரு தந்தையின் கடமையாகும். என் தந்தை இதை எனக்கு செய்த பொழுது எனக்கு அவர் மீது அந்த விநாடி தருனங்களில் அவர் மீது வெறுப்பு உண்டானாலும் அந்த வயதில் அது உடனே மறைந்து விடும்.

 ஆனால் கல்லூரி காலங்களிலும், திருமணத்திற்கு முன்னரும் அவர் நம் மீது காட்டும் கண்டிப்பு நமக்கு அவர் மீது அளவு கடந்த வெறுப்பை உண்டாக்குவதும் உண்டு. திருமணம் செய்து பிள்ளை பெறும் ஒவ்வொரு மகனும், தன் பிள்ளைகளின் அந்தந்த பருவத்தில் அவன் தந்தையின் நிலையை உணர்வான். அவன் பிள்ளைகள் வளரும் அந்த நேரத்தில் அவனுக்கு தன் தந்தை மீது மிகுந்த கரிசனமும், அவர் கண்டிப்புக்குள் இருந்த பாசமும் புரியும்! பெரும்பாலான தந்தைகள் தாங்கள் செய்த தவறை தங்கள் பிள்ளைகள் செய்து விடக்கூடாது என்பதில் அதிக கவணமாய் இருப்பர். ஆனால் பிள்ளைகளுக்கு இது தெரியும் பொழுது, அவர் செய்யாததையா நாம் செய்து விட்டோம் என்ற எண்ணம் ஏற்படும்.

 பிள்ளைகளுக்கு தன் சம்பாத்தியத்தையும் தன் வாங்கும் சக்தியையும் உணர்த்தி, குடும்பத்தின் கஷ்டத்தையோ அல்லது சூழ்நிலையையோ புரிய வைப்பதும் தந்தையின் கடமையே. அதை மென்மையாக உணர வைக்க வேண்டியது தாயின் கடமை. பிள்ளைகளுக்குள் ஆசைப்பட்ட பொருட்களை வாங்கி குடுக்கும் அதே பெற்றோர்தான் பிள்ளைகளிடம் சில விஷயங்களை மறுத்தும் பழக்க வேண்டும். உலகத்தில் இல்லை, கிடையாது போன்ற விசயங்கள் இருக்கின்றன, தோல்வி என்ற ஒன்று இருக்கின்றது அதிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ளவேண்டும் என்பதை பிள்ளைகளை உணர வைக்க வேண்டும் என்பதும் பெற்றோரின் கடமையாகும்.

 ஆனால் இந்த படத்தில் பொறுப்பற்ற ஒரு தந்தையையும் அவரால் கெடுத்து குட்டிச்சுவராக்கப்படும் குழந்தையையும் நியாயப் படுத்த முயற்சித்துள்ளனர். தனது வருமானத்திற்கு வழி பார்க்காமல் தந்தையிடம் இருந்து கோபித்துக் கொண்டு தனியாக (குடும்பத்தை மட்டும் தந்தையின் பொறுப்பில் விட்டு விட்டு) கிளம்பும் ஒரு வாலிபரின் மற்றும் அவரின் மகளின் கதை. தன்னை அவமானப்படுத்தும் நன்பனை சகித்துக்கொண்டு அவரிடம் கைமாற்று கேட்கும் கதாநாயகனால் தந்தையிடம் மட்டும் அதிகம் ஈகோ பார்க்க முடிகிறது. இரண்டாயிரம் ரூபாய் பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாத தந்தை மகளுக்கு இருபத்தி மூன்றாயிரம் ரூபாய்க்கு நாய்க்குட்டி வாங்கி தர முயல்வது அதை விட கொடுமை. கதாநாயகனின் இயலாமையை நியாப்படுத்தி அதன் மூலம் படம் பார்ப்பவர்களிடம் கருனை எதிர்பார்க்கிறார். பிள்ளையின் எதிர்காலத்திற்கு பணம் சேர்க்க வேண்டிய கடமை உள்ள தந்தை, பிள்ளையின் எதிர்காலத்திற்கு கல்வி குடுக்க வேண்டிய தந்தை இரண்டாயிரம் ரூபாய் கூட கைமாற்றும் வாங்கும் நிலையில் இருபத்தி மூவாயிரம் ரூபாய்க்கு நாய்க்குட்டி வாங்க முயற்சிப்பதை கொடுமை என்று தலையில்தான் அடித்துக் கொள்ள முடியும்!!

   அதே போல் தனது மகள் தனக்கு கிடைகாத பொருட்களை தனது உடன் படிக்கும் நன்பர்களிடம் இருந்து களவாடுவதை நியாயப்படுத்த முயற்ச்சிப்பது கொடுமையிலும் கொடுமை. அதற்கு மகள் சொல்லும் காரணம் "இதெல்லாம் காஸ்ட்லியான பொருளா... எங்க அப்பாவால வாங்க முடியாதா... அதனால நான் திருடிட்டேன்"! இப்படி எல்லா பிள்ளைகளும் கிளம்பி விட்டாள் ஊரு தாங்குமா? இல்லை நாடுதான் தாங்குமா? தனது மகளுக்கு சுத்தமாக படிப்பு வரவில்லை என்பதால் கண்டிக்கும் ஆசிரியைகளிடம் கோபிக்கும் அந்த இளைஞன் தனது மகளின் வேறு திறமைகளை வெளிக்கொணர முயற்சிக்கவும் இல்லை! இந்த படம் கண்டிப்பாக போற்றப்பட வேண்டிய படம் இல்லை. நம் பிள்ளைகள் இதை பார்த்து மாற்று மன நிலைக்கு வந்து கெட்டுபோகத்தான் வாய்ப்பு அதிகம்!

எனக்கும் என் பிள்ளைகளை அடித்து விட்டு அலுவலகம் வந்த பின் மனம் மிகவும் படாதபாடு படத்தான் செய்யும். ஆனால் தப்பு செய்யும் பிள்ளைகளை சரியான நேரத்தில் தண்டிப்பதும் கண்டிப்பதும் த்ந்தையின் கடமை என்பது எம்மை நிலைக்கு கொண்டு வரும், படிக்கவில்லை என்று என் பிள்ளைகளை நான் கண்டித்ததில்லை. ஆனால் தீய பழக்கவழக்கங்களை எப்பொழுதும் ஏற்றுக் கொண்டதில்லை. இந்தப் படம் இது ஒரு பொறுப்பற்ற ஊதாரி தகப்பனால் கெட்டு குட்டி சுவராகும் பிள்ளையின் கதை என்று வேண்டுமானால் கூறலாம். வித்தியாசமான கதை, நேர்த்தியான படப்பிடிப்பு, ஒளிப்பதிவு போன்ற அம்சங்களுக்காக பாராட்டலாமே ஒழிய நல்ல படம் என்று பாராட்டவே முடியாது. மண்ணிக்கவும் இயக்குனர் ராம் அவர்களே.....

No comments: